அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் மெட்ரோ சுரங்கப்பணி அடுத்த வாரம் தொடங்குகிறது
- 43 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் என மொத்தம் 119 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன.
- அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்துக்கு சென்றடைய உள்ளது.
திருவான்மியூர்:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி மாதவரம் பால்பண்ணை -சிறுசேரி சிப்காட் வரையும் (45.4கி.மீட்டர்), கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பணிமனை வரையும் (26.1கி.மீட்டர்), மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையும் (44.6கி.மீட்டர்) என மொத்தம் 116.1 கி.மீட்டர் தூர நீளத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் மொத்தம் 76 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள், 43 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் என மொத்தம் 119 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன. 73.5 கி.மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட பாதையும், 42.6 கி.மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. இதில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி சிப்காட் வரை உள்ள வழித்தடத்தில் 28 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களும், 19 உயர்நிலை ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் 1.2 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் சுரங்கம் தோண்டும் எந்திரமான 'காவேரி' சுரங்கப் பாதை அமைத்து திரு.வி.க., பாலம் அருகே அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்துக்கு சென்றடைய உள்ளது.
முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் இதுவரை 560 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து உள்ளன. 2-வது எந்திரம் மூலம் 200 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பருவ மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றால் தாமதமாகி வந்த அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில், சுரங்கப்பாதை பணி அமைக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது. அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான, ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.