தமிழ்நாடு

வேப்பம்பட்டில் ரெயில்வே கேட்டை கடந்த போது லாரி பழுதாகி நின்றதால் பரபரப்பு

Published On 2024-03-05 08:27 GMT   |   Update On 2024-03-05 08:30 GMT
  • ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.
  • சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இதன் அருகே ரெயில்வே கேட் உள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் வேப்பம்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திறந்து இருந்த இந்த ரெயில்வேகேட்டை தாண்டி செல்ல முயன்றது.

ரெயில்வே கேட்டில் தண்டவாளப்பகுதியில் சென்ற போது திடீரென லாரி பழுதாகி நின்றது. லாரியை மேலும் இயக்க முடியாததால் தண்டவாளத்திலேயே நின்றது.

இதனால் அவ்வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.

தொடர்ந்து சென்னைகடற்கரை-திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர்-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரெயில்கள் வந்து கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை அங்கிருந்து அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் இருந்த லாரியை தள்ளி வெளியேற்றினர். இதன் பின்னரே ரெயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு பின்னர் ரெயில் சேவை சீரானது. இதனால் ரெயில்பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில்வே கேட்டில் லாரி பழுதாகி நின்றதும் உடனடியாக ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News