கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளை பறவைகள் வாழிடமாக அரசு அறிவிக்க வேண்டும்- அன்புமணி
- கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளுக்கு பறவைகள் அதிக அளவில் வந்து செல்வது இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும்.
- ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்கின்றன. அவற்றை பாதுகாப்பதன் மூலம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பறவைகள் வாழிடமாக மாற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ள நிலையில், அந்தச் சூழலை சீர்கெடுக்கும் வகையிலான நிகழ்வுகள் அப்பகுதியில் பெருமளவில் நடந்து வருவது கவலையளிக்கிறது.
கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டிய பல பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் படையெடுப்பதை பல தருணங்களில் நானே பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளுக்கு பறவைகள் அதிக அளவில் வந்து செல்வது இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும். ஆனால், இந்தக் கொடையை தக்கவைத்துக் கொள்ள அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதை அழிப்பதற்கான செயல்கள் தான் அதிக அளவில் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறை பயன்படுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்தி, அங்கு மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.