தமிழ்நாடு

கவர்னர் அரசியல் பேசினால் பாதிக்கப்படுவது மக்கள்தான் : அன்புமணி ராமதாஸ்

Published On 2023-11-18 07:24 GMT   |   Update On 2023-11-18 07:28 GMT
  • தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
  • 2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.

கோவை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கவர்னர், முதலமைச்சர் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். இருவரும் இரண்டு பக்கம் சென்றால் பாதகம் தமிழக மக்களுக்கு தான். எனவே மக்கள் நலன் கருதி கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.

கவர்னர் கட்சி சார்ந்தவராக இருக்க கூடாது. ஒரு கட்சியின் கொள்கையை அவர் கடைபிடிக்கவோ, பேசவோ கூடாது. தமிழ்நாடு வளர்ச்சிக்கு கவர்னர் தடையாக இருக்க கூடாது. கவர்னர் அரசியல்வாதி கிடையாது. அவர் அரசியல் பேசினால் மக்களுக்கு தான் பாதிப்பு.

தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனை இந்த கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். சமூக நீதி பேசும் தி.மு.க.வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த என்ன தயக்கம்?

தமிழ்நாட்டில் உள்ள 540 சாதிகளும் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். அதில் பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்ற சிறப்பு திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.

மருத்துவர் ராமதாஸ் கட்சி தொடங்கும் முன்பிருந்தே மதுவை ஒழிக்க போராட்டம் நடத்தி வருகிறார். மது விலக்கை எல்லா கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்கும் நிலைக்கு வர பா.மக. தான் காரணம். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது மதுக்கடைகளை மூட வேண்டும். மதுக்கடைகளை மூடும் எண்ணம் தமிழக அரசிற்கு துளியும் கிடையாது. மதுக்கடைகளை மூடினால் சாலை விபத்துகளை குறைக்க முடியும்.

2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டின் போது முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், மாவட்ட செயலாளர்கள் அசோக், கோவை ராஜ், தங்கவேல் பாண்டியன் மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

Similar News