சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்த குருவியாக செயல்பட்ட வாலிபரை காரில் கடத்திய கும்பல்
- போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க களமிறங்கினர்.சோதனைச்சாவடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- விஜயமங்கலம் டோல்கேட்டில் வந்த 2 காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.
அவினாசி:
திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்கர் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 39). இவர் சிங்கப்பூரில் 15 ஆண்டாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது மனைவி கஸ்தூரி, மகள் யாஷிகா ஆகியோருடன் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
இதையடுத்து குணசேகரனின் குடும்பத்தினரை, அவரின் தந்தை சண்முகம், தாய் கலையரசி மற்றும் உறவினர்கள் ஒரு காரில், திருச்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலூர் பகுதியில் குணசேகரன் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த போது 2 காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தனர்.
பின்னர் வலுகட்டாயமாக குணசேகரனை மட்டும் தங்களது காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். அதிர்ச்சியடைந்த குணசேகரனின் தந்தை சண்முகம், அவிநாசி போலீசில் புகார் அளித்தார்.
உடனே, போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க களமிறங்கினர்.சோதனைச்சாவடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் விஜயமங்கலம் டோல்கேட்டில் வந்த 2 காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்த திருச்சி நாயக்கர் வீதியை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக்(28), அண்ணா நகர் பகுதியை சேர்ந்த உசேன் முகமது மகன் சாஜித் அஹமது (32),காரைக்குடியை சேர்ந்த சலீம் அகமது மகன் முகமது நஜ்முதீன்( 34) ஆகிய 3பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது குணசேகரனை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 3பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை அவிநாசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடமிருந்து குணசேகரனையும் மீட்டனர்.
பின்னர் கைதான 3பேரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது குணசேகரனை கடத்தியதற்கான காரணம் தெரியவந்தது.
குணசேகரனுக்கு சிங்கப்பூரில் பழக்கமான நண்பர் காரூன் என்பவர் நசீர் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது நசீர், குணசேகரனிடம் நீங்கள் குடும்பத்துடன் ஊருக்கு செல்ல, விமான டிக்கெட் செலவையும், கையில் ஒரு லட்சம் ரூபாயும் தருவதாக கூறியுள்ளார்.அதற்கு பதிலாக தான் கொடுக்கும் 500 கிராம் எடையுள்ள தங்கத்தை கோவையில் உள்ள தனது நண்பர்களிடம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.சம்மதம் தெரிவித்த குணசேகரன் தங்கத்தை வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார்.
திடீரென அங்கு வந்த நசீர் தான் கொடுத்த தங்கத்தை ஒரு சில காரணங்களுக்காக இப்போது வேண்டாம் எனக்கூறி வாங்கி சென்றார். செலவுக்கு கொடுத்த பணத்தை நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள். பின்னர், பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
அதன்பின் குணசேகரன் குடும்பத்தினருடன் கோவை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். இதற்கிடையில் குணசேகரனின் போட்டோவை ஏற்கனவே இங்குள்ள ஆட்களுக்கு நசீர் அனுப்பியதால் தங்கத்தை கொண்டு வந்து கொடுக்காமல் ஏமாற்றி செல்வதாக நினைத்த கும்பல் குணசேகரனை கடத்தியுள்ளனர்.இதில் தொடர்புடைய நசீரின் கூட்டாளிகள் கார்த்திக், முகமது நஜ்முதீன், சாஜித் அகமது ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3பேரையும் தேடி வருகின்றனர். தங்கம் கடத்த உதவியவரை 3பேர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.