தமிழ்நாடு

தொடர் முகூர்த்தம் எதிரொலி- ஈரோடு மார்க்கெட்டில் வாழை இலை விலை இரண்டு மடங்கு உயர்வு

Published On 2023-05-20 03:58 GMT   |   Update On 2023-05-20 03:58 GMT
  • திடீரென நேற்று இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சி கோவில், பெருந்துறை, சோலார், கவுந்தப்பாடி, பாசூர், கருமாண்டம் பாளையம் போன்ற பகுதியில் இருந்து வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தற்போது ஈரோடு சின்ன மார்க்கெட்டிற்கும் வாழை இலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த 2 மார்க்கெட்டில் இருந்து மாநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வாழை இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று திடீரென வாழை இலைகளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பெரிய கட்டு இலை (130 வரை எண்ணிக்கை) 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று திடீரென இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து திருமண நிகழ்வுகள், சுப முகூர்த்தங்கள் வருவதே ஆகும்.

மேலும் முக்கியமான காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது போக 1 ரூபாய்க்கும் குறைவாக விற்ற டிபன் இலை 4 ரூபாய்க்கும், 4 ரூபாய்க்கு விற்ற தலைவாழை இலை 6 ரூபாய்க்கும் கூடுதலாக விற்கப்படுகிறது. டிபன் மற்றும் சாப்பாட்டு இலை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் மட்டுமின்றி ஓட்டல் கடைக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News