தமிழ்நாடு

வடமாநிலத்தவர் பற்றி வதந்தி: திருப்பூரில் இன்று பீகார் குழு ஆய்வு

Published On 2023-03-05 07:19 GMT   |   Update On 2023-03-05 07:19 GMT
  • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக தமிழக அரசு சார்பில் எடுத்து கூறப்பட்டது.
  • வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்க கூடிய கோவை, திருப்பூரில் இரு மாநில குழுவினரும், ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

கோவை:

கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

கட்டுமான தொழில், மோட்டார் பம்ப் உற்பத்தி, பனியன் கம்பெனி முதல் தள்ளுவண்டி வியாபாரம் வரை அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் இங்கு உள்ளனர்.

இந்த நிலையில், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பீகார் மற்றும் ஜார்க்கண்டை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.

இதனால் வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு கூட்டம், கூட்டமாக செல்ல ரெயில் நிலையங்களில் கூடுவதாகவும் கூறப்பட்டது.

இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதவிர இந்த சம்பவம் ஜார்க்கண்ட், பீகார் மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. இருமாநில எதிர்கட்சிகளும் தமிழகத்தில் தங்கள் மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பின.

உடனடியாக இரு மாநில முதல்-மந்திரிகளும் தமிழக அரசை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டறிந்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் அந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்த போதிலும் இரு மாநில அரசுகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவினர் தமிழகத்தில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டன.

இதையடுத்து ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் இருந்து 10 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழுவினர் நேற்று தமிழகத்திற்கு வந்தனர்.

அவர்கள் சென்னையில் தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த், தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக தமிழக அரசு சார்பில் எடுத்து கூறப்பட்டது.

இதற்கிடையே வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்க கூடிய கோவை, திருப்பூரில் இரு மாநில குழுவினரும், ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி இன்று பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில் நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் கமிஷனர் அலோக்குமார், சிறப்பு பணி படை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூருக்கு வந்தனர். அவர்களுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினரும் வந்தனர்.

அவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து பேசினர். அவர்களிடம் உங்களுக்கு இங்கு பாதுகாப்பு எப்படி உள்ளது. உங்களை யாராவது தாக்கினார்களா? அச்சுறுத்தல் ஏதாவது இருக்கிறதா? குறைகள் ஏதாவது இருந்தால் தங்களிடம் சொல்லுங்கள் எனவும் கேட்டு தொழிலாளர்களிடம் விசாரித்தனர்.

அப்போது வடமாநில தொழிலாளர்கள், அதிகாரிகள் குழுவினரிடம் நாங்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. எங்களை தமிழர்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவரை போலவே நடத்துகின்றனர். அரசும் எங்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்து வருகிறது என தெரிவித்தனர்.

பின்னர் 2 மாநில குழுவினரும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்கள், பல்வேறு சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களிடம் இரு மாநில குழுவினரும் வடமாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்க கூடிய அனுப்பர்பாளையம், 15 வேலாம்பாளையம், பெருமாநல்லூர் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மக்களை சந்தித்து விசாரித்தனர்.

பீகார், ஜார்க்கண்ட் மாநில குழுவினர் நாளை கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். இங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை புரியும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தொழில் அமைப்பினர், வடமாநில பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் வடமாநில தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறை, நிறைகளையும், பாதுகாப்பு குறித்தும் கேட்டறிய உள்ளனர்.

Tags:    

Similar News