தமிழ்நாடு

சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸ்: 33 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2023-04-19 08:55 GMT   |   Update On 2023-04-19 08:55 GMT
  • நடைபாதை அருகே கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
  • சம்பவம் தொடர்பாக பரங்கிமலை புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னையில் நள்ளிரவில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மெரினா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தொழுகையை முடித்த பின்பு இளைஞர்கள் சிலர் கூட்டமாக இருசக்கர வாகனங்களில் சென்று பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனை தடுப்பதற்காக சென்னையில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் முக்கிய சாலைகளில் கண்காணித்தனர்.

அதன்படி நேற்று சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாலிபர்கள் பைக் சாகசம் மற்றும் ரேசில் ஈடுபட்டதாக 33 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். 33 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்தனர்.

அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று அதிகாலை 4 மணிக்கு ஆலந்தூர் சுரங்க பாதை அருகே 14 வயது சிறுவர்கள் 2 பேர் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக தாம்பரம் நோக்கி சென்று உள்ளனர்.

அப்போது நடைபாதை அருகே கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் வாகனத்தை ஒட்டி வந்த ஆலந்தூரை சேர்ந்த 14 வயது சிறுவனின் தலை மெட்ரோ தூணில் மோதியது. சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுவனின் இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News