சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்பதா? தமிழகம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா போராட்டம்
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலையில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை:
சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜனதாவினர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.
10-ந்தேதிக்குள் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் 11-ந்தேதி அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று மாலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.
இதே போல் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கில் முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா, நெல்லை தெற்கு மீனாதேவ், நெல்லை வடக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தென்காசி-நீலமுரளி யாதவ், மதுரை-ராமசீனிவாசன், திருச்சி-எச்.ராஜா, பெரம்பலூர்-தடா பெரியசாமி, மயிலாடுதுறை-ஆதவன், திருவாரூர்-முருகானந்தம், கடலூர்-அஸ்வத்தாமன் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.