தமிழ்நாடு

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: சென்னையில் பணிபுரியும் 9 மாத கர்ப்பிணியை கரம் பிடித்த காதலன்

Published On 2023-09-26 06:20 GMT   |   Update On 2023-09-26 06:20 GMT
  • ஆஷா மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் ஐயப்பனின் பெற்றோர் அவரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
  • பெண் வீட்டார் திருமயம் கலிய பெருமாள் கோவிலில் ஆஷாவுக்கும் ஐயப்பனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா (வயது21). இவரும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(24) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆஷா புதுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து விட்டு சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி மொபைல் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.

அதேபோல் கல்லூரி படிப்பை முடித்த ஐயப்பன் சேலத்தில் உள்ள தனியார் டவர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஐயப்பன் சேலத்திலிருந்து அவ்வப்போது சென்னை சென்று ஆஷாவை சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதில் ஆஷா கர்ப்பம் அடைந்தார்.

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனிடம் ஆஷா கேட்டிருக்கிறார்.

இதனையடுத்து ஐயப்பன் அவரது பெற்றோரிடம் ஆஷாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆஷா மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் ஐயப்பனின் பெற்றோர் அவரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த 9 மாத கர்ப்பிணியான ஆஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து திருமயம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமையா பானு விசாரணை நடத்தினார்.

அப்போது ஐயப்பன் ஆஷாவை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் ஐயப்பனின் பெற்றோர் ஆஷாவை திருமணம் செய்தால் வீட்டிற்கு அவர்கள் வரக்கூடாது என்றனர்.

இதையடுத்து பெண் வீட்டார் திருமயம் கலிய பெருமாள் கோவிலில் ஆஷாவுக்கும் ஐயப்பனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

Tags:    

Similar News