தமிழ்நாடு

ஈரோடு மாநகராட்சி பள்ளிகளில் சோதனை அடிப்படையில் சுடச்சுட சேமியா கிச்சடி, கேசரியை ருசித்து சாப்பிட்ட மாணவர்கள்

Published On 2022-09-09 09:24 GMT   |   Update On 2022-09-09 09:24 GMT
  • ஈரோடு மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 26 தொடக்கப்பள்ளிகளில் இன்று காலை மாணவர்களுக்கு ரவா கேசரி, சேமியா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டது.
  • காளைமாடு சிலை அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சோதனை அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு சுட சுட சேமியா கிச்சடி, ரவா கேசரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு:

அரசு தொடக்க பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இந்த திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்தை முன்கூட்டியே சோதனை அடிப்படையில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இத்திட்டத்திற்காக ஈரோடு மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 26 தொடக்கப்பள்ளிகளில் இன்று காலை மாணவர்களுக்கு ரவா கேசரி, சேமியா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டது.

காளைமாடு சிலை அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சோதனை அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு சுட சுட சேமியா கிச்சடி, ரவா கேசரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேயர் நாகரத்தினம், கணேசமூர்த்தி எம்.பி, ஆகியோர் மாணவ -மாணவிகளுக்கு உணவு பரிமாறினர். மாணவ மாணவிகளுடன் மேயர் நாகரத்தினம் அமர்ந்து உணவு ருசித்து சாப்பிட்டார். இதே போல் பெற்றோர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அவர்களும் ருசித்து சாப்பிட்டனர்.

இன்று மாநகராட்சியில் உள்ள 26 பள்ளிகளைச் சேர்ந்த 2,445 மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது. இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒட்டு மொத்தமாக உணவு தயாரிக்கப்பட்டு மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு காலை 8 மணிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி திட்டம் அமலுக்கு வர உள்ளதையடுத்து திட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது குறித்தும், பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் சிற்றுண்டி வந்து சேர்ந்ததா? சிற்றுண்டி தரம், சுவை, மாணவர்களின் விருப்பம், தேவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News