பெற்றோர், உறவினர்களுடன் ஜவுளி கடைக்கு சென்ற மணப்பெண் மாயம்- கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு ஓட்டம்?
- நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் ஜவுளிக்கடையில் இருந்து திடீரென்று மாயமான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கார்த்திகேயன் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி:
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரகாரம் விஷ்ணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60). இவரது மகள் வைஷ்ணவி (26). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பெற்றோர் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். இந்த திருமணம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே நேற்று கார்த்திகேயன் மற்றும் குடும்பத்தினர் வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு முகூர்த்த புடவைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆடைகள் எடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் துணி தேர்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வைஷ்ணவி கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் உள்ளிட்ட உறவினர்கள் வைஷ்ணவியை ஜவுளிக்கடை முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் ஜவுளிக்கடையில் இருந்து திடீரென்று மாயமான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது தொடர்பாக கார்த்திகேயன் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெற்றோரின் விருப்பத்திற்காக மனமின்றி திருமணத்திற்கு சம்மதித்தாரா? அல்லது யாரையாவது காதலித்து வந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் சென்னை, திருச்சி, தஞ்சாவூரில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.