தமிழ்நாடு

திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் ரத்து- அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2024-04-26 05:57 GMT   |   Update On 2024-04-26 06:05 GMT
  • உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உறைதல் பணிக்கு மட்டுமே இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
  • ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மதுரை:

கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை தேறி வரும் நிலையில் தமிழகத்தில் இந்த திரவ நைட்ரஜன் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

திரவ நைட்ரஜனை நேரடியாக உணவுப்பொருட்களில் கலந்து விற்பனை செய்யக்கூடாது, அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உறைதல் பணிக்கு மட்டுமே இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மதுரை நகர் பகுதி முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் முதல் இரவு வரை மதுரை தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் ஸ்மோக் பிஸ்கட் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் கடை சுற்றியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர ஸ்டிக்கர்களும் அகற்றப்பட்டு உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News