தமிழ்நாடு

ஆவினில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி- 4 பேர் மீது வழக்கு

Published On 2022-07-11 07:13 GMT   |   Update On 2022-07-11 07:13 GMT
  • நான் அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தேன்.
  • நான் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டேன்.

மதுரை:

மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள முள்ளிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 25). இவர் மதுரை தல்லாகுளம் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தேன். அப்போது அனந்தகிருஷ்ணன், தனசேகரன், வைரவஜெயபாண்டி, மணிபாரதி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்தனர்.அவர்கள், ஆவின் நிறுவனத்தில் பணம் கொடுத்தால் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்காக ரூ.15 லட்சம் வரை கொடுக்க வேண்டி வரும் என்று ஆசை காட்டினர்.

அவர்களிடம் ரூ.12 லட்சம் கொடுத்தேன். இதனைப் பெற்றுக் கொண்ட அவர்கள், வாக்குறுதி கொடுத்தபடி வேலை வாங்கித் தரவில்லை. நான் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டேன். அவர்கள் எனக்கு ஆவின் நிறுவனத்தில் பணி கிடைத்ததாக, போலி ஆணை கொடுத்தனர். நான் வேலையில் சேருவதற்காக ஆவின் நிறுவனத்துக்கு சென்றேன். அப்போது தான் அது போலி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, என்னிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த அனந்த கிருஷ்ணன், தனசேகரன், வைரவ ஜெயபாண்டி, மணிபாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அப்போது அருணாசலம், 4 பேரிடமும் பணம் கொடுத்ததற்கான ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News