சென்னையில் கோழிக்கறி விலை கடும் உயர்வு- ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை
- சென்னையில் கோழிக்கறி விலை சமீப காலமாக கடுமையாக உயர்ந்து வருகிறது.
- காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிறது.
சென்னை:
சென்னையில் கோழிக்கறி விலை சமீப காலமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிறது.
மேலும் ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் இருந்தும், சென்னைக்கு கறிக்கோழிகள் கொண்டு வரப்படுகிறது. தற்போது கோடை வெயில் அதிகமாக கொளுத்துவதால் கறிக்கோழி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சென்னைக்கு கறிக்கோழிகள் குறைவாகவே கொண்டு வரப்படுகின்றன.
மேலும் தற்போது மீன்பிடி காலமும் அமலில் உள்ளது. இதனால் மீன்வரத்தும் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் மீன் விலை அதிகமாக உள்ளது. சிறிய வகை மீன்களே கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது.
மீன்தட்டுப்பாடு நிலவும் நிலையில் ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. எனவே மீன் மற்றும் ஆட்டுக்கறி வாங்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். இதனால் கடந்த 2 மாதங்களாக அசைவ பிரியர்களின் கவனம் கோழிக்கறி பக்கம் திரும்பியுள்ளது.
இதனால் சென்னையில் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோழிக்கறி மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு கிலோ கோழிக்கறி சில்லரை விலையில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு கோழிக்கறி விலை உயரத் தொடங்கியது.
கடந்த ஏப்ரல் மாதம் கிலோ ரூ.220 -க்கும், மே மாதம் கிலோ ரூ.240-க்கும் விற்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் கோழிக்கறி விலை ரூ.260 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று கோழிக்கறி விலை ரூ.300 ஆக அதிகரித்தது.
மீன்பிடி தடைகாலம் இந்த வாரம் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மீன் வரத்து அதிகரிக்க தொடங்கும். மேலும் இன்னும் சில நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்பதால் கறிக்கோழி உற்பத்தியும் அதிகரிக்கும். அதன்பிறகு கோழிக்கறி மற்றும் மீன்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.