பாராளுமன்ற இரு அவைகளிலும் தி.மு.க. குரலை கேட்டால் பா.ஜனதா நடுங்குகிறது- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
- இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல்.
- குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது.
தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல.
இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க. அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி.
கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற காணொலி வாயிலான மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் என்னென்ன பொறுப்பு, அந்தப் பொறுப்பினை எந்த முறையில் நிறைவேற்றிட வேண்டும் என்று விரிவாகவும் தெளிவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
கழகத்தின் சார்பு அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை உணர்ந்து, மாவட்டக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு அணியும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை மாவட்ட ஒன்றிய நகர-பேரூர் கழக அமைப்புகள் நெறிப்படுத்திட வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் இந்த நிகழ்வுகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
கலைஞர் என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல! தமிழ் இனம் மொழி-நிலம் காத்து நிற்கும் வினைச்சொல். நமக்கு உரிமையுள்ள உரிச்சொல். அரசியல் எதிரிகளை அடையாளம் காட்டி 'உரி'க்கின்ற சொல். எந்நாளும் நமக்கு ஊக்கத்தையும், இன எதிரிகளுக்கு அச்சத்தையும் தருகின்ற சொல். இந்தியா முழுமையும் உள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சொல். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல். குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.