கள்ளச்சாராய உயிரிழப்புகள்- ரூ.10 லட்சம் நிவாரணம் - விசாரணை ஆணையம் அமைப்பு
- தலைமை செயலகத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.