தமிழகத்தில் ஜூலை 10-ந்தேதி 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
- கடந்த மே மாதம் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
- இந்த முகாமில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
சென்னை:
இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதற்காக வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை 28 சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த நிலையில் கடந்த மே மாதம் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமின் போது பூஸ்டர் தவணை தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க அவர் அறிவுறுத்தி உள்ளார்.