ஓட்டல்கள், கடற்கரையில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு- முக கவசம் அணிய வலியுறுத்தல்
- மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
- பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
சென்னை:
சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரானின் மரபணு மாற்றம் அடைந்த 'பி.எப்.7' வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் பலர் சென்னையில் இயல்பாக சுற்றித் திரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிவதால் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொது இடங்களுக்கு செல்பவர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஓட்டல்கள், கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். அப்போது தான் மற்றவர்களிடம் இருந்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு மாநகராட்சி பணியாளர்களும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.