ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டை செலுத்திய கோர்ட் ஊழியர் கைது
- 10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் பணம் இரட்டிப்பாக மாறி இருக்கும் எனவும் உறுதி அளித்தார்.
- விக்னேஷ்மூர்த்தியிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது அவை கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என கண்டறியப்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்மூர்த்தி (வயது31). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த முருகன் மனைவி ஜோதிமணி (வயது38). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் கோர்ட்டுக்கு பணி நிமித்தமாக வந்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜோதிமணி தன்னிடம் வெளிநாட்டு நபர் ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.20 ஆயிரம் தருவதாக கூறுகிறார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை இரட்டிப்பாக்கி தருகிறார். தன்னிடம் போதுமான அளவு பணம் இல்லாததால் உங்களிடம் பணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் என கூறி உள்ளார்.
அதன்படி கடந்த 12-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து ரெயில் மூலம் ஜோதிமணியும், விக்னேஷ்மூர்த்தியும் பெங்களூரு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் தங்கி இருந்தபோது வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் அங்கு வந்தார். அப்போது விக்னேஷ்மூர்த்தி தான் கொண்டு வந்த ரூ.44,500 பணத்தை அவரிடம் கொடுத்தார். அந்த நபர் ஒரு பெட்டியில் பவுடர்களை கொட்டி அதனுடன் பணக்கட்டுகளையும் வைத்து சீல் வைத்து உங்கள் ஊருக்கு சென்றவுடன் இதை திறந்து பார்க்கவும் என கூறி உள்ளார்.
10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் பணம் இரட்டிப்பாக மாறி இருக்கும் எனவும் உறுதி அளித்தார். அதனை நம்பி விக்னேஷ்மூர்த்தி நேற்று அந்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ரூ.35 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தன்னுடன் வந்த வக்கீல் ஜோதிமணியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த 76 எண்ணிக்கை கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் பணத்தை பெரியகுளத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் செலுத்த சென்றார். அப்போது அந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் என சம்மந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகம் சார்பில் வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அங்கு வந்து கள்ளநோட்டுகளை செலுத்த முயன்ற விக்னேஷ்மூர்த்தியை பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில் நடந்த விபரங்களை அவர் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பணம் மோசடி வழக்கில் உடந்தையாக இருந்த பெண் வக்கீல் ஜோதிமணியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விக்னேஷ்மூர்த்தியிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது அவை கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என கண்டறியப்பட்டது. தன்னிடம் பேசிய வெளிநாட்டு நபர் இதுவரை தொலைபேசி மூலம் மட்டுமே தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவருடன் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் வக்கீல் ஜோதிமணி கூறினார்.
இருந்தபோதும் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீசார் பெங்களூருவில் இவர்கள் தங்கி இருந்த லாட்ஜில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட வெளிநாட்டு நபர் இதுபோன்ற வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கள்ளநோட்டுகளை கோர்ட்டு ஊழியரே பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.