தாராபுரத்தில் சொத்து பிரச்சினையில் விவசாயி வெட்டிக்கொலை- அண்ணன் வெறிச்செயல்
- ஈஸ்வரமூர்த்தி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- தண்டனை காலம் முடிந்து இருவரும் வெளியே வந்திருந்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் ஓட்டக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி (வயது 60). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு மாடுகள் வளர்த்து வந்தார். இன்று அதிகாலை மாடுகளில் பால் கறந்து விட்டு கொட்டா புளிபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் வழங்குவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
கொண்டரசம்பாளையம் விநாயகர் கோவில் அருகே செல்லும் போது திடீரென அங்கு வந்த ஈஸ்வர மூர்த்தியின் உடன் பிறந்த அண்ணன் பழனிச்சாமி(63) கண்ணிமைக்கும் நேரத்தில் ஈஸ்வரமூர்த்தியை அரிவாளால் வெட்டினார். இதில் ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாராபுரம் டி.எஸ்.பி., கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஈஸ்வரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பழனிச்சாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். ஈஸ்வரமூர்த்தி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது ஈஸ்வர மூர்த்திக்கும் பழனிச்சாமிக்கும் பொதுவாக 8 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஈஸ்வரமூர்த்தி மனைவி முத்துலட்சுமி மற்றும் மகள்கள் வாணி ஸ்ரீ(12 ), இளங்கவி(11) ஆகியோருடன் தோட்டத்தில் வசித்து வந்தார். அதே தோட்டத்தில் மற்றொரு பகுதியில் பழனிசாமி வசித்து வந்தார்.
இந்தநிலையில் நிலத்தை பிரித்து கொடுக்காத காரணத்தினால் ஈஸ்வர மூர்த்திக்கும் பழனிச்சாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சினையில் இன்று காலை, தம்பி என்றும் பாராமல் ஈஸ்வர மூர்த்தியை பழனிச்சாமி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்கனவே சகோதரர்களான பழனிச்சாமி , ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கடந்த 38 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த அண்ணன்-தம்பியான சேது , ஸ்ரீதர் ஆகியோரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிந்து இருவரும் வெளியே வந்திருந்தனர். இந்தநிலையில் சொத்து பிரச்சினையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஈஸ்வர மூர்த்தியை பழனிச்சாமி கொலை செய்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.