வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்- மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு பணி தீவிரம்
- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
- புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்கிருந்து ரெயில்களில் வருகிறார்கள்.
மிக குறைந்த சம்பளத்தில் இவர்கள் வேலைபார்ப்பதாலும் அடிக்கடி லீவு எடுப்பது இல்லை என்பதாலும் பல நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன.
கட்டுமான பணிகள், ஓட்டல்கள், அழகு நிலையங்கள், பின்னலாடை நிறுவனங்கள், தென்னந்தோப்பு பணிகள், விவசாய பணிகள், மளிகை கடை, காய்கறி மார்க்கெட் வேலைகள், மூட்டை தூக்குபவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என பல்வேறு நிறுவனங்களிலும் இவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை, சேலம், நீலகிரி உள்பட பல மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். பீகார், ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் இங்கு வந்து பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல சமூக ஊடகங்களில் போலியான வீடியோ சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து பதட்டமான சூழல் உருவாகி உள்ளது.
பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து உயர் அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டு வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும், போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்து உண்மை நிலையை அறிந்து வருகின்றனர்.
இந்த சூழலில் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தமிழகத்தில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை கணக்கெடுக்கும் பணி மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், '6 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் இருப்பதாகவும், சரியான புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ள கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், திருமழிசை, மப்பேடு, பொன்னேரி பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பற்றிய விபரங்களை கணக்கெடுக்க மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார். கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள மகேந்திராசிட்டி, மறைமலைநகர் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை கணக்கெடுத்து வருகின்றனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அமைப்புசார் மற்றும் அமைப்பு சாரா துறைகளில் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் மற்றும் பணி அமர்த்துநர்கள் மேற்படி தொழிலாளர்கள் குறித்த விவரங்களை www.labour.tn.gov.in/ISM என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும், ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்பிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது நலன்காத்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் பயணங்களின் போதும், இதர தருணங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது குறைகள், புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.