தமிழ்நாடு (Tamil Nadu)

இன்று தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்

Published On 2024-09-28 03:19 GMT   |   Update On 2024-09-28 03:19 GMT
  • 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.
  • 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி உள்ள செந்தில் பாலாஜி பொது கூட்ட மேடையில் கவுரவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம்:

தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பவள விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17-ந்தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அத்துடன் தி.மு.க. ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது.

கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார்.

அதன்படி தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன் குமார், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவரான நடிகர் கருணாஸ், ஆதி தமிழர் பேரவை கட்சி தலைவர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனர் தலைவர் பி.என். அம்மாவாசி ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசுகிறார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற தி.மு.க.வினர் விருப்பத்தை நிறைவேற்றும் முக்கிய அறிவிப்பை, இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பொதுக்கூட்டம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.

அத்துடன், 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி உள்ள செந்தில்பாலாஜி பொது கூட்ட மேடையில் கவுரவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் தி.மு.க.வினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News