நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 8 லட்சம் பேர் கையெழுத்து
- 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
- மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.
சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதே போல் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தி.மு.க. சிறப்பு பேச்சாளர் பங்கேற்று மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு குறித்தும் அதன் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்து கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவும் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இதுவரை 8 லட்சம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது. சென்னையில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா ஒரு பள்ளியில் சென்று மாணவர்களிடம் கையெழுத்து பெற்றது சர்ச்சையாகி உள்ளது. இதனால் இப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியே கையெழுத்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போது ஒரு எம்.எல்.ஏ. தொகுதிக்கு 1000 கார்டு வீதம் முதற்கட்டமாக அனுப்பப்பட்டு கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இந்த கார்டுகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டலாக பெறப்படும் கையெழுத்துகள் சேலத்தில் டிசம்பரில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் அறிவாலயம் வழியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.