கோடை மழை பெய்வதால் மின்தேவை 6 ஆயிரம் மெகாவாட் குறைந்தது
- மே மாதம் தொடக்கத்தில் அது 22 ஆயிரம் மெகாவாட்டை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது.
- சாமான்ய மக்களும் கோடை வெயிலை சமாளிக்க ஏ.சி.யை பயன்படுத்தினார்கள். இதனால் மின்தேவை உயர்ந்தது.
சென்னை:
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இருந்தது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது. மார்ச் மாதத்திலேயே வெயில் தாக்க தொடங்கி படிப்படியாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்து உச்சத்தை தொட்டது.
வெப்ப அலை இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினார்கள். பகலில் மட்டுமின்றி இரவிலும் புழுக்கம் காணப்பட்டது. இதனால் மின்சாரத் தேவை அதிகரித்தது. 16 ஆயிரம், 17 ஆயிரம் மெகாவாட் மின்சார தேவையானது படிப்படியாக அதிகரித்து 20 ஆயிரத்தை தொட்டது.
மே மாதம் தொடக்கத்தில் அது 22 ஆயிரம் மெகாவாட்டை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. இதுவரையில் இல்லாத அளவிற்கு மின்சார பயன்பாடு இருந்தது. வீடுகளில் ஏ.சி. அதிகளவில் பயன்படுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். சாமான்ய மக்களும் கோடை வெயிலை சமாளிக்க ஏ.சி.யை பயன்படுத்தினார்கள். இதனால் மின்தேவை உயர்ந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மின் தேவை குறைந்தது. அதிலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ததால் வெப்பம் தணிந்தது. 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் மிதமான மழை பெய்வதால் ஏ.சி. பயன்பாடு குறைந்தது. இதன் காரணமாக மின் தேவையும் கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 16,736 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. வரும் நாட்களிலும் படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.