தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி 15-ந்தேதி தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

Published On 2023-09-03 09:45 GMT   |   Update On 2023-09-03 09:46 GMT
  • தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
  • தி.நகர் தொகுதியில் இன்பதுரை, வால்பாறை தொகுதியில் நாஞ்சில் அன்பழகன் பேசுகிறார்கள்.

சென்னை:

மதுரையில் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடந்தது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற அந்த மாநாடு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை வலுப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைந்தது.

அந்த வெற்றியுடன் அடுத்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி தயார்படுத்த தொடங்கி உள்ளார். இதற்காக வருகிற 10-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.

இதற்கிடையே மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்களை மக்களுக்கு விளக்குவதற்கு தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். வருகிற 15, 16, 17 மற்றும் 19-ந்தேதிகளில் அ.தி.மு.க. பேச்சாளர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரையும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு 15.9.2023, 16.9.2023, 17.9.2023 மற்றும் 19.9.2023 ஆகிய 4 நாட்கள், 'பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளன.

கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15.9.2023 அன்று அண்ணா சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளார்.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விவரம் வருமாறு:-

தாம்பரம் தொகுதியில் 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கும் பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். பொன்னேரி தொகுதியில் தமிழ்மகன் உசேன், வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விசுவநாதன், எழும்பூர் தொகுதியில் பொன்னையன், நா.பாலகங்கா பேசுகிறார்கள்.

பர்கூர் தொகுதியில் தம்பித்துரை, ஆவடி குமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் செங்கோட்டையன், குமாரபாளையம் தொகுதியில் தங்கமணி, தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணி, ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி தொகுதியில் செம்மலை, கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரம், மதுரை தெற்கு தொகுதியில் செல்லூர் ராஜு, அவினாசி தொகுதியில் தனபால், தர்மபுரி தொகுதியில் கே.பி. அன்பழகன் பேசுகிறார்கள்.

தஞ்சை தொகுதியில் காமராஜ், வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன், காஞ்சிபுரம் தொகுதியில் கோகுல இந்திரா, கரூர் தொகுதியில் கரூர் சின்னசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமார், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி, ராணிப்பேட்டை தொகுதியில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மேலூர் தொகுதியில் ராஜன் செல்லப்பா பேசுகிறார்கள்.

சிங்காநல்லூர் தொகுதியில் வைகைசெல்வன், கடலூர் தொகுதியில் எம்.சி.சம்பத், ஆந்திராவில் டி.கே.என்.சின்னையா, மயிலாப்பூர் தொகுதியில் நடிகை பசி சத்யா பேசுகிறார்கள்.

அதுபோல 16, 17 மற்றும் 19-ந்தேதிகளில் பேசுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. 17-ந்தேதி பல்லாவரம் தொகுதியில் வளர்மதி, திண்டிவனம் தொகுதியில் சி.வி.சண்முகம், அம்பாசமுத்திரம் தொகுதியில் கருப்பசாமி பாண்டியன், அருப்புக்கோட்டை தொகுதியில் மா.பா.பாண்டியராஜன், வேளச்சேரியில் நிர்மலா பெரியசாமி, காட்பாடியில் கவிஞர் முத்துலிங்கம், கவுண்டன்பாளையத்தில் நடிகர் சுந்தரராஜன், கீழ்வேலூர் தொகுதியில் பாத்திமா பாபு பேசுகிறார்கள்.

19-ந்தேதி பூந்தமல்லி தொகுதியில் பெஞ்சமின், செய்யூர் தொகுதியில் டாக்டர் வேணுகோபால், துறைமுகம் தொகுதியில் பாலகங்கா, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன், தி.நகர் தொகுதியில் இன்பதுரை, வால்பாறை தொகுதியில் நாஞ்சில் அன்பழகன் பேசுகிறார்கள்.

Tags:    

Similar News