தமிழ்நாடு

சென்னையில் உள்ள 3 தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

Published On 2024-07-31 07:19 GMT   |   Update On 2024-07-31 07:19 GMT
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும்.
  • தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சென்னை:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.

கடந்த 10-ந்தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் 2 கட்டமாக நடந்து வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதி வாரியாக அழைக்கப்பட்டு பேசி வருகிறார். அப்போது நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை அங்கு பதிவு செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு வரும் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான கூட்டணி அடித்தளத்தை இப்போதே உருவாக்குவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலையில் கள்ளக்குறிச்சி தொகுதி நிர்வாகிகளுடனும், மாலையில் சேலம் தொகுதி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். கலந்தாலோசனை கூட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.


நாளை (1-ந்தேதி) சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். காலையில் 9 மணிக்கு வடசென்னை தொகுதி, 11 மணிக்கு மத்திய சென்னை, மதியம் 3.30 மணிக்கு தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 3 தொகுதிகளுக்கும் உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

இன்றுடன் 35 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசியுள்ளார். நாளைய தினத்தை தொடர்ந்து 3 நாட்கள் இடைவெளி விட்டு 5-ந்தேதி நடக்கும் கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. கரூர் மற்றும் புதுச்சேரி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

Tags:    

Similar News