சர்வாதிகாரி போல் செயல்படும் மோடி ஆட்சியை அகற்ற வேண்டும்- செல்வபெருந்தகை
- பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளன.
- இந்திய ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வாக அமைய முடியும்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமராக நரேந்திர மோடி பதவி யேற்றது முதல் அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் சுயேட்சையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
தேர்தல் தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிற நிலையில், எதிர்பாராத விதமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளன.
இன்றைய தேர்தல் நடைமுறை என்பது சமநிலைத்தன்மை இல்லாததாக இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி உறுதியாக கூறுகிறார். இதன்மூலம், ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரி போல தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்துக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து இந்திய ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வாக அமைய முடியும்.
சர்வாதிகார அரசியலை செய்து வருகிற மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்றுவதே ஒரே நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு தலைவர் ராகுல் காந்தியின் கடுமையான உழைப்பின் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.