தமிழ்நாடு (Tamil Nadu)

தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல்

Published On 2024-03-31 07:03 GMT   |   Update On 2024-03-31 07:03 GMT
  • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை.
  • பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பூந்தமல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பூந்தமல்லி அருகே கோளப்பன்சேரி சோதனை சாவடியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுத்து செல்லப்படும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் கட்டுகட்டாக ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே மாலை 6 மணிக்கு மேல் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் இரவில் உரிய ஆவணங்களை இல்லாமல் பணத்தை கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News