தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் மாதம் தேர்தல்?

Published On 2024-05-17 05:47 GMT   |   Update On 2024-05-17 05:47 GMT
  • 9 மாவட்டங்களுக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தினார்.
  • தி.மு.க. ஆட்சியிலேயே 27 மாவட்டங்களுக்கும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன.


கடந்த 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டது.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறுசீமைப்பு பணிகள் முடியாத காரணத்தால் மேற்குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தினார்.

சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 2020 ஜனவரி மாதம் பதவி ஏற்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2021 அக்டோபர் மாதம் பதவி ஏற்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

இந்த தேர்தல்கள் 27 மாவட்டங்களுக்கு மற்றும் 9 மாவட்டங்களுக்கு என தனித்தனியாக நடந்ததால் இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் 21 மாதம் உள்ளது.

இதனால் இந்த வித்தியாசத்தை மாற்றி சீராக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானால் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் டிசம்பரில் முடிந்ததும் தனி அதிகாரியை நியமித்து உள்ளாட்சி அமைப்பு செயல்பாட்டை நீட்டிக்க வேண்டும். இதற்கு சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும்.


இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு அதிகாரிகள் ஏற்கனவே கொண்டு சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார். அப்போது வெவ்வேறு நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கு 2024 டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் 2021 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த உள்ளாட்சிகளுக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்த வேண்டும்.

2026 செப்டம்பர் என்பது சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு வருவதாகும். அந்த கால கட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு சாதகமாகவும் அமையலாம். அல்லது பாதகமாகவும் இருக்கலாம். அந்த சூழல்களை அப்போது தான் கணிக்க முடியும்.

எனவே தி.மு.க. ஆட்சியிலேயே 27 மாவட்டங்களுக்கும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்து 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சூழல் அமைந்து விட்டால் இந்த ஆண்டு டிசம்பர் மாதமே 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு உள்ளாட்சி தேர்தலை நடத்த முற்படும் போது 2026-ல் பதவி காலம் முடியும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு பதவிகளை கலைத்து விட்டு இந்த டிசம்பர் தேர்தலோடு சேர்த்து நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை பொறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு எடுப்பார் என தெரிகிறது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீனியர் அமைச்சர்களிடம் அடுத்து உள்ளாட்சி தேர்தலையும் விரைவில் எதிர்கொள்ள வேண்டும். அதிலும் முழுமையாக வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதையும் சட்டசபையில் அமைச்சர்களும் தெளிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News