பல்வேறு இடங்களில் கைவரிசை- காதலனுடன் ஜாலியாக இருக்க கொள்ளையடித்த இளம் பெண்
- மீரா சொந்த வீட்டிலேயே பணத்தை திருடி அதனை காதலனுக்கு செலவு செய்துள்ளார்.
- திருடிய வெள்ளிப் பொருட்களை ஈரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று உள்ளார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது வள்ளியாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜோதி வெங்கட்ராமன்.விரதம் மனைவி கோமதி. இவர்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் வித்யா மாதங்கி டாக்டராக உள்ளார்.
இந்நிலையில் வித்யா மாதங்கியின் 3 வயது குழந்தையை கவனித்துக் கொள்ள வேலைக்கு ஆள் தேவைப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த விஜயராமு என்பவரின் மகள் மீரா என்கிற பிரதிமீனா (18) என்பவரை மாதம் ரூ.18,000 சம்பளத்துக்காக வேலைக்கு சேர்த்து உள்ளனர். அவரை வீட்டில் ஒரு அறையிலேயே தங்க வைத்து கொடுத்துள்ளனர்.
வேலைக்கு சேர்ந்த 4 -வது நாளில் மீரா தனது தந்தை இறந்து விட்டார் என்று ஒரு பேக்கில் துணியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். பின்னர் வேலைக்கு வரவில்லை.
ஜோதி வெங்கட்ராமன் பலமுறை மீராவை போனில் தொடர்பு கொண்டு வேலைக்கு வருமாறு கூறியுள்ளார். அவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் மீராவுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று சோதனையிட்டார். அப்போது வெள்ளி பொருட்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டிகள் மட்டும் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சடைந்த ஜோதி வெங்கட்ராமன் பூஜை அறையில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் சரி பார்த்துள்ளார். அப்போது ரூ.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மாயமாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மீராவை விசாரணைக்கு வருமாறு காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த மீரா போலீசாரிடம் வெள்ளிப் பொருட்களை திருடியதற்கான ஆதாரம் உள்ளதா? சிசிடிவி காட்சி பதிவுகள் உள்ளதா? எதை வைத்து என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு போலீசாரை திணறடித்தார். இதனை அடுத்து போலீசார் அவரிடம் கைரேகை பதிவுகளை எடுத்து விசாரணை நடத்தப் போவதாக கூறினர். இதனால் பயந்து போன மீரா வெள்ளிப் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போலீசார் மீராவை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு பரபரப்பான தகவல் வெளியாகின. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
மீரா சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிறிய கிராமம். பெற்றோர் பிழைப்புக்காக திருச்சி வந்தனர். மீரா 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு படிப்பு வராததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். மீராவுக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களுடன் காதல் வயப்பட்டு உள்ளார். மீரா சொந்த வீட்டிலேயே பணத்தை திருடி அதனை காதலனுக்கு செலவு செய்துள்ளார். இதனை அவர் வாடிக்கையாக செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் அவர் திருமணத்துக்காக வைத்திருந்த 10 பவுன் நகையை மீரா எடுத்துக்கொண்டு அதனை விற்பனை செய்து காதலனுடன் வீடு திரும்பி உள்ளார். இதை பெற்றோர் கண்டிக்கவே வீட்டை விட்டு வெளியேறிய மீரா ஏதாவது ஒரு இடத்தில் வீட்டு வேலைக்கு சேர்வதும் அங்கு கிடைக்கும் பொருட்களை திருடி கொண்டு காதலுடன் ஜாலியாக செலவு செய்வதையும் வாடிக்கையாக கொண்டு உள்ளார்.
பின்னர் ஒரு முறை வீட்டில் பணத்தை திருடி கொண்டு காதலனுடன் கேரளா சென்றுள்ளார். போலீசார் அவரை மீட்டு கொண்டு வந்தனர். அதன் பின் மீராவை சேலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தப்பிய மீரா தனது பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் சேலம் கலெக்டர் பெற்றோரை வரவழைத்து அவரிடம் மீராவை ஒப்படைத்துள்ளனர். மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய மீரா ஈரோட்டில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி வேலை தேடி வந்துள்ளார். அப்போதுதான் ஜோதி வெங்கட்ராமன் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என அறிந்து கொண்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு சேர்ந்த உடனேயே ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களை திருடியுள்ளார். திருடிய வெள்ளிப் பொருட்களை ஈரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று உள்ளார்.
அந்த கடைக்கு வெள்ளி பொருட்களை விற்க சென்ற மீரா தனது தந்தை தாசில்தாராக இருப்பதாகவும், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ மனை செலவுக்காக பணம் தேவைப்படுவதாக கூறி வெள்ளிப் பொருட்களை விற்றுள்ளார் அதன் மூலம் ரூ.86 ஆயிரம் பணத்தை பெற்று காதலனுடன் ஜாலியாக செலவு செய்துள்ளார். மீரா பல நண்பர்கள் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுடன் ஜாலியாக இருக்க இது போன்ற வீடுகளில் வேலை செய்வது போல் நடித்து பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவரது அறையை சோதனையிட்டபோது 14 இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகளை அடகு வைத்த ரசீதுகள் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
இவர் அவர்கள் கூறினார்.
பின்னர் மீரா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மீராவின் காதலன் குறித்த விவரங்களை கடத்தூர் போலீசார் சேகரித்து வருகின்றனர்.