காந்தி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு- முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம்
- எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேரடி என்ற இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நின்ற நிலையில் உள்ள சிலை உள்ளது. இந்த சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்த சிலையை சுற்றி தற்காலிக கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
கைத்தடி ஊன்றியது போல இருந்த சிலையின் பாகம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதில் சிலையை உடைத்த நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்ததால் கம்பத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.