பால், நெய்யை தொடர்ந்து ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு
- ஆவின் நெய் வகைகளின் விலைகள் நேற்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- பால், நெய் விலை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணை விலையும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வெண்ணை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆவின் நிர்வாகம் பல்வேறு பால் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நேற்று நெய் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நெய் விற்பனை விலை மட்டும் 3 முறை உயர்ததி இருந்தனர். இந்தநிலையில் இன்று ஆவின் வெண்ணை விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சமையல் பயன்பாட்டுக்கான உப்பு கலக்காத வெண்ணை 100 கிராம் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. 500 கிராம் வெண்ணை ரூ.250ல் இருந்து ரூ.260 ஆகவும், உப்பு கலந்த வெண்ணை 100 கிராம் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது.
500 கிராம் 255 ரூபாயில் இருந்து ரூ.265 ஆகவும் உயர்ந்துள்ளது. அதாவது வெண்ணை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெய் உற்பத்திக்கு மூலப்பொருளான வெண்ணெய் விற்பனை விலையை கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக உயர்த்தாமல் இருந்து விட்டு, நெய் விற்பனை விலையை மட்டும் கடந்த மார்ச், ஜூலை மற்றும் தற்போது டிசம்பர் மாதம் என நடப்பாண்டின் 9மாதங்களில் மட்டும் லிட்டருக்கு 115 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். இப்போது வெண்ணை விலையையும் உயர்த்திவிட்டனர்.
இன்று முதல் சமையல் வெண்ணை (500கிராம் விற்பனை விலை 250 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும்) மற்றும் உப்பு வெண்ணை (500கிராம் 255 ரூபாயில் இருந்து 265 ரூபாயாகவும்) கிலோவிற்கு 20 ரூபாய் உயர்த்தி அறிவித்து இந்த விலை உயர்வை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது ஆவின் நிறுவனம். இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.