தமிழ்நாடு (Tamil Nadu)

விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரருக்கு உருவச்சிலை - தாயிடம் வழங்கி நண்பர்கள் நெகிழ்ச்சி

Published On 2024-01-23 09:04 GMT   |   Update On 2024-01-23 09:08 GMT
  • ரித்திக்கின் நினைவு சக வீரர்களுக்கு எப்போதும் அவர்களது மனதை வீட்டு நீங்கா வண்ணம் இருந்துள்ளது.
  • போட்டிக்கு ரித்திக்கின் தாயார் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஊட்டி:

ஊட்டி அருகே எல்லநள்ளி, அட்டுகொலை கிராமத்தை சேர்ந்தவர் ரித்திக்.

இவர் கேத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கால்பந்து வீரரான இவர் அந்த பகுதியை சேர்ந்த கால்பந்து அணியில் விளையாடி வந்தார்.

கடந்த ஆண்டு ரித்திக் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ரித்திக்கின் உயிரிழப்பு அவரது பெற்றோர் மட்டுமின்றி, அவரது நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

கால்பந்து போட்டியில் விளையாடும் போது, ரித்திக்கின் நினைவு சக வீரர்களுக்கு எப்போதும் அவர்களது மனதை வீட்டு நீங்கா வண்ணம் இருந்துள்ளது.

தங்கள் ஆரூயிர் நண்பனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நண்பர்கள் முடிவு செய்தனர். அதன்படி நண்பருக்கு உருவசிலை செய்யும் யோசனை தோன்றியுள்ளது.

இதையடுத்து ரித்திக்கின் மார்பளவு உருவசிலையை வடிவமைத்து வாங்கினர். இதனை அவரது தாயிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

அதன்படி அட்டுகொல்லை கிராமத்தில் ஏ.டி.கே. கால்பந்து அணி சார்பில் கால்பந்து போட்டி நடந்தது.

இந்த போட்டிக்கு ரித்திக்கின் தாயார் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

போட்டியை காண வந்த அவர்களை, ரித்திக்கின் நண்பர்கள் வரவேற்றனர்.

பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களின் முன்னிலையில், ரித்திக்கின் நண்பர்கள், ரித்திக்கின் தாய் ரெஜினாவிடம் நினைவு பரிசு வழங்கினர்.

அதனை ஜான் திறந்து பார்த்த போது, அதில் ரித்திக்கின் மார்பளவு உருவ சிலை இருந்தது. இதை பார்த்ததும் ரெஜினா மற்றும் ஜான் இருவரும் கண்கலங்கினர். கண் கலங்கிய படியே தனது மகனின் உருவசிலை அளித்த நண்பர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

விபத்தில் இறந்த நண்பருக்காக, சக நண்பர்கள் மார்பளவு சிலையை உருவாக்கி, அவரது பெற்றோரிடம் வழங்கிய இந்த செயலானது அங்கு கூடியிருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News