மழைக்கால பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
- விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பணியாகும்.
- மழை வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பருவ மழை தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வடிகால்களை முறையாக கண்காணித்து, சரி செய்து, தயார் நிலையில் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும்.
குறிப்பாக டெல்டா மாவட்டப்பகுதிகளில் காவிரி பாசனப் பகுதிகளில் வடிகால்கள் மண் எக்கல் அடித்து நீர் வடிவதற்கு வழியில்லாமல் உள்ளது. எனவே அப்பகுதிகளில் மண்ணை தூர்வாரி மழைநீர் வடிவதற்கான வகையில் ஏற்பாடு செய்து கொடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு கடந்த கால பருவ மழையின் போது விவசாய நிலங்கள், பயிர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே மழைக்காலப் பாதிப்பில் இருந்து விவசாய நிலங்களை, பயிர்களை, விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பணியாகும்.
மேலும் தமிழக அரசு தொடர்ந்து மழைப்பெய்ய இருக்கின்ற வேளையில் மழை வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.