தமிழ்நாடு

புதிய தேசிய கல்வி கொள்கைதான் இளைஞர்களின் எதிர்காலம்- கவர்னர் ஆர்.என். ரவி

Published On 2024-05-27 10:28 GMT   |   Update On 2024-05-27 10:28 GMT
  • கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.
  • புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.

மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

2021-ம் ஆண்டு நான் கவர்னராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சனைகளும் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின் தங்கி உள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 5-ம் இடத்தில் இருந்த நாம் 11-ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3-ம் இடத்திற்கு முன்னேற உள்ளோம்.

தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும். நாம் சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை, பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News