தமிழ்நாடு

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், 30-ந்தேதி அரசு டாக்டர்கள் மவுன போராட்டம்

Published On 2022-10-15 08:53 GMT   |   Update On 2022-10-15 08:53 GMT
  • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரசாணை 354-ஐ அமல்படுத்துவோம் என்று கூறினார். இதனை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
  • முதல்-அமைச்சர் இதில் கவனம் செலுத்தி அரசாணயை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

சென்னை:

அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை, துணை செயலாளர் பாலமுருகன் ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

அரசு மருத்துவர்களுக்கு, அரசாணை 354-ன்படி 12 ஆண்டுகளில் 4 ஊதியப்பட்டை வழங்க வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற டாக்டர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு தற்போது முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரசாணை 354-ஐ அமல்படுத்துவோம் என்று கூறினார். இதனை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம். முதல்-அமைச்சர் இதில் கவனம் செலுத்தி அரசாணயை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இது கருணாநிதி போட்ட அரசாணையாகும். இதையும் முதல்-அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த அரசாணை நிறைவேற்றப்படாததால் இந்தியாவிலேயே தமிழக அரசு மருத்துவர்கள் குறைவான சம்பளம் வாங்கும் நிலையில் இருந்து வருகிறோம்.

இது போன்று மேலும் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன் வைத்திருக்கிறோம்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கலைஞர் மீண்டும் உயிர் பெற்று வரக்கோரி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி மவுன போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த போராட்டத்துக்கு முன்னதாகவே அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி தமிழக முதல்-அமைச்சர், மருத்துவர்களின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News