தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டமே நடக்குது.. தாலியை மட்டும் கழட்ட சொல்கிறீர்கள் - உயர்நீதிமன்றம் கண்டனம்

Published On 2024-07-11 02:10 GMT   |   Update On 2024-07-11 02:10 GMT
  • ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா?
  • குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

மதுரை:

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த சம்பவத்தில் சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானவர்கள் கைதானார்கள். ஆள்மாறாட்டத்துக்கு உதவியதாக இடைத்தரகர்கள் சிலரையும் போலீசார் பிடித்தனர்.

ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 5 ஆண்டுகளாக நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கிடப்பில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தது.

மேலும், தமிழக மாணவர்களுக்காக வடமாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியவர்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமை தெரிவிக்காமல் இழுத்தடிப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் புகார் குறித்தும் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு விவரங்களை தேசிய தேர்வு முகமை வழங்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பின்னர் தேசிய தேர்வு முகமை சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரினார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, 2019-ம் ஆண்டில் நீட் தேர்வு நடந்தபோது வெளிநாட்டில் இருந்த மாணவனுக்காக இங்கு 3 மாநில மையங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மோசடி நடந்து இருக்கிறது. ஆனால் தமிழக நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்களின் தாலியைக்கூட கழற்றுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா? அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

பின்னர், இதுகுறித்து தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க அவகாசம் வழங்கி, அடுத்த கட்ட விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News