null
3வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு- 4 கட்டுமான நிறுவனம், வீடுகளில் 7½ கிலோ தங்கம் பறிமுதல்
- தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று முன்தினம் காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அய்யப்பன் தாங்கல் அசோக் ரெசிடென்சி ஓட்டல், அண்ணா நகர் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதேபோல ஆதித்யா ராம், அம்பாலால் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நீடித்து வருகிறது.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.
வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் குடியாத்தம் சந்தபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமானவரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.
குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3வது நாளாக சோதனை நடைபெற்றது. அம்பாலால் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 7½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனி, விருதம்பட்டு பகுதியில் உள்ள 100ம் நம்பர் பீடி கம்பெனியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.