தமிழ்நாடு

மரணம் அடைந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதிலும் புதுமை... ஆன்லைனில் பணத்தை கட்டினால்போதும்...

Published On 2023-11-16 07:34 GMT   |   Update On 2023-11-16 09:53 GMT
  • கிராமத்தில் ஒருவர் இறந்து போனால் உறவினர்கள் கூடுவார்கள்.
  • வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் இறுதி யாத்திரையில் பங்கெடுப்பார்கள்.

வாழும் வரை வாழ்ந்து முடித்த பிறகு வெற்றுடலை சுடுகாட்டுக்கு தூக்கி செல்ல நாலு பேர் தேவை!

ஆனால் அந்த நாலு பேரை கூட சம்பாதித்து வைக்காததாலும், நகர்ப்புற வாழ்க்கை மாற்றத்தாலும் பிணத்தை தூக்கி செல்லவும், இறுதிச் சடங்குகள் செய்யவும் தொழில் நுட்பங்களை தேட வேண்டிய காலம் வந்திருக்கிறது.

தொழில் ரீதியாக இதற்காக நிறுவனங்கள் வந்து விட்டன. தலைநகர் டெல்லி முதல் நாடு முழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த நிறுவனங்களும் லாபம் கொழிக்கும் நிறுவனங்களாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒரு நிறுவனம் உறுப்பினராக சேர ரூ.37,500 கட்டணமாக வசூலிக்கிறது. ஊரார், உறவினர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

செத்துப்போனால் அந்த நிறுவனத்தில் இருந்து வந்து உரிய சடங்குகளை நடத்தி தகனமோ, அடக்கமோ செய்துவிடுகிறார்கள்.

ஆன்லைனில் தொடர்பு கொண்டு பதிவு செய்தாலும் போதும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர் என்று எந்த சமூகமாக இருந்தாலும் சரி. அந்த சமூகத்துக்கு உரிய முறையில் இறுதிச் சடங்கை செய்கிறார்கள். பின்னர் உடலை ஆம்புலன்சில் தூக்கி சென்று தகனம் செய்கிறார்கள். சாம்பலை சேகரித்து எங்கு கரைக்க வேண்டும் என்கிறோமோ அங்கு கரைக்கவும் செய்கிறார்கள்.

உடலை எடுத்து செல்வது, பிரீசர் பாக்ஸ், அலங்காரம் செய்தல், பண்டிதர்களை ஏற்பாடு செய்தல், பிரார்த்தனை செய்தல், இரங்கல் நிகழ்ச்சி நடத்துவது, பஜனை குழுக்களை ஏற்பாடு செய்தல், உணவு, தேனீர் ஏற்பாடு செய்தல் உள்பட இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை சொல்லி அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் உள்ளது.

தாய்-தந்தையரை முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டு வெளிநாடுகளில் சொகுசாக வாழும் பிள்ளைகள் தாய்-தந்தை பெயரில் பணம் கட்டி உறுப்பினராக்கி விடுகிறார்கள். இந்த தகவலை முதியோர் இல்லத்திலும் பதிவு செய்து விடுகிறார்கள். இறக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து இறுதி காரியங்களை செய்துவிட்டு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார்கள்.

அவர்கள் விரும்பினால் வீடியோ பதிவு செய்தும் கொடுத்து விடுகிறார்கள்.

அதேபோல் சொந்த, பந்தம், உற்றார், உறவினர் என்ற எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டு நகர வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டவர்களும் அந்த மாதிரி கடைசி கட்டத்தில் இந்த நிறுவனங்களையே நாடுகிறார்கள்.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், உணவு, மருந்து, மளிகைப்பொருள், துணி மணி, காய்கறி என்று தேவையான எல்லாமும் வீடு தேடி வருவது போல் இப்போது இறுதிக் கடமை செய்யவும் வீடு தேடி வந்து விடுகிறார்கள்.

இந்த மாற்றத்தை முன்னேற்றம் என்பதா...? அல்லது...?

தாய், மகன், அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, நண்பர்கள், உறவினர்கள், ஊரார் என்ற எல்லா உறவுகளில் இருந்தும் ஒவ்வொருவரும் விலகி தனி மனிதனாகி கொண்டிருக்கிறார்கள்.

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை என்ற வாழ்க்கை நியதியை கூட கைவிட்டோம்.

கிராமத்தில் ஒருவர் இறந்து போனால் உறவினர்கள் கூடுவார்கள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் இறுதி யாத்திரையில் பங்கெடுப்பார்கள். கண்ணீர் சிந்துவார்கள், சுமந்து செல்லும் நாலு பேர், சுற்றி செல்லும் பலர் என்று ஊரே கூடி தன்னோடு வாழ்ந்தவரை மரியாதையோடு வழியனுப்பி வைக்கும்.

அதுதான் மனிதனாக பிறந்து வாழ்ந்ததன் அடையாளம்.

ஆனால் பணமும், ஆடம்பரமும் மட்டுமே வாழ்க்கை என்ற தவறான முடிவால் முற்றிலும் மாறுபட்ட, சம்பந்தமில்லாத வாழ்க்கை முறையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் நடந்து முடிந்த பின்னே நல்லது, கெட்டது தெரிந்து என்ன லாபம்?

Tags:    

Similar News