இவரைப் பற்றி குறைசொன்னால் மட்டுமே மோடிக்கு கோபம் வரும்- ஜோதிமணி
- மத்திய அரசு என்ன தவறு செய்தாலும் அதனை நாங்கள் தட்டி கேட்டு வருகிறோம்.
- தமிழக எம்.பிக்கள் புகார் மனு அளித்தும் அதனை மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள் பிரித்து கூட பார்ப்பதில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் ஜோதிமணி எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தமிழகத்திற்காக குரல் கொடுக்கும் எம்.பிக்களே பாராளுமன்றத்திற்கு தேவை. மத்திய அரசு என்ன தவறு செய்தாலும் அதனை நாங்கள் தட்டி கேட்டு வருகிறோம். அ.தி.மு.கவை போல அடிமை சாசனம் எழுதி தரவில்லை. மத்திய அரசின் 100 நாள் வேலைதிட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால்தான் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 12 வாரம்வரை சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்ததைதவிர பா.ஜ.க வேறு ஒன்றும் செய்யவில்லை. சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதிஒதுக்கி தமிழை இருட்டடிப்பு செய்தனர். இதுகுறித்து தமிழக எம்.பிக்கள் புகார் அளித்து போராட்டம் நடத்தியும் எந்தவித பலனும் இல்லை.
40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சி செய்தது. அப்போது கூட தமிழகத்தில் கட்சி அலுவலகங்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் பா.ஜ.க மாவட்டம் தோறும் கட்சி அலுவலகங்களை திறந்து வைத்துள்ளனர். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாதவர் பிரதமர் மோடி. அவருக்கு அதானியை பற்றி குறைசொன்னால்மட்டுமே கோபம் வரும். ரெயில்வேயில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுகுறித்து தமிழக எம்.பிக்கள் புகார் மனு அளித்தும் அதனை மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள் பிரித்து கூட பார்ப்பதில்லை.
இதற்கு காரணம் ரெயில்வேயை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதுதான் காரணம். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள இந்துகோவில்கள் பற்றி பா.ஜ.க மத்திய அமைச்சர்கள் அக்கரையுடன் பேசி வருகின்றனர். இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயற்சி எடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் சிறுகுறு வியாபாரிகளை பாதுகாக்க ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க அரசு வியாபாரிகளை அழிப்பதற்காக இதனை பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.