தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி குழு 5-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
- அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.
- ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன? மக்களின் கோரிக்கைகள் என்னென்ன? என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி., மருத்துவர் அணி எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி கனிமொழி எம்.பி. தலைமையில் இந்த குழுவினர் வருகிற 5-ந்தேதி முதல் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்து கேட்க உள்ளனர்.
அதன்படி பிப்ரவரி 5-ந்தேதி தூத்துக்குடி, 6-ந்தேதி கன்னியாகுமரி, 7-ந்தேதி மதுரை, 8-ந்தேதி தஞ்சாவூர், 9-ந்தேதி சேலம், 10-ந்தேதி கோவை, 11-ந்தேதி திருப்பூர், 16-ந்தேதி ஓசூர், 17-ந்தேதி வேலூர், 18-ந்தேதி ஆரணி, 20-ந்தேதி விழுப்புரம் செல்கிறார்கள்.
அதன் பிறகு பிப்ரவரி 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் சென்னையில் கருத்து கேட்க உள்ளனர்.
தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.
அதன் பிறகு ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.