மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது
- ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
- வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் அதிவிரைவு ரெயிலான வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் சென்னை-மைசூரு, பெங்களூரு-ஐதராபாத், பெங்களூரு-தார்வார், மங்களூரு-கோவா இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தமிழக தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு இடையே வருகிற 20-ந்தேதி முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில் மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட ரெயில், திருச்சி (7.15/7.20), சேலம் (9.55/10.00) வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் மறுமார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சேலம் (5.00/5.05), திருச்சி (8.20/8.25) வழியாக இரவு 9.25 மணிக்கு மதுரையை வந்தடையும். வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.