ஆனைமலை அருகே சுற்றி திரியும் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
- விவசாயிகளின் பயிருக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள மக்னா யானையால் நாங்கள் கடந்த 4 மாதங்களாக நிம்மதி இழந்து தவிக்கிறோம்.
- வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சரளப்பதி கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக இரவு நேரத்தில் மக்னா யானை சுற்றி திரிகிறது.
இந்த யானை அங்குள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் இந்த யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து வனத்துறையினர் தனிக்குழு அமைத்தும், கும்கி யானைகளை நிறுத்தியும் மக்னா யானையை ஊருக்குள் வரவிடாமல் வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அடங்கிய குழுவினர் மக்னா யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. இதையடுத்து சரளப்பதி பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய வனத்துறையினர், பிரச்சினையின் தீவிரத்தை மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் யானையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோழிக முத்தி யானைகள் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட சின்னத்தம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் துணையுடன் கடந்த சில நாட்களாக மக்னா யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம், சேத்துமடை கிராம நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் சரளப்பதியில் ஆய்வு மேற்கொள்ள வந்தனர். அப்போது கிராம மக்கள் அவர்களை முற்றுகையிட்டு யானையை விரைந்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் பயிருக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள மக்னா யானையால் நாங்கள் கடந்த 4 மாதங்களாக நிம்மதி இழந்து தவிக்கிறோம்.
வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் முடியவில்லை. எனவே மக்னா யானையை பிடித்து முகாம் யானையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். இன்னும் 2 நாட்களில் மக்னா யானையை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தங்களிடம் தெரிவித்ததாக மக்கள் கூறினர்.
வனத்துறையினர் கூறும் போது, மக்னா யானையை பிடிக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து அதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்பதால் யானையின் உடல்நிலை குறித்து வனகால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். அதன்பின்னர் யானையை பிடிப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றனர்.