"மக்களைத் தேடி மேயர்" புதிய திட்டம் அறிமுகம்- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
- கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் செலவில் தரமான விக்டர் கண்ட்ரோல் உபகரணம் வழங்கப்படும்.
- சென்னை மாநகரில் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள் ரூ.60 லட்சம் செலவிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் ரூ.1.35 கோடி மதிப்பிலும் வழங்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் 2023-2024-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது.
சென்னை மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலை வகித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.
மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை கவச உடையும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.18.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் செலவில் தரமான விக்டர் கண்ட்ரோல் உபகரணம் வழங்கப்படும். சென்னை மாநகரில் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள் ரூ.60 லட்சம் செலவிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் ரூ.1.35 கோடி மதிப்பிலும் வழங்கப்படும்.
ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மீதான தடை அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் மஞ்சப்பை வழங்கும் திட்டம் சுய உதவிக்குழுவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
பொதுமக்களின் வரவேற்பு மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.
மண்டலங்கள் 4,5,6,7,8 ஆகியவற்றில் பணிபுரியும் 10,002 தூய்மை பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இரவில் ஒளிரும் புதிய வடிவமைப்புடன் கூடிய சீருடைகள் ஆண்டிற்கு 2 வழங்கப்படும். இதற்காக ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னையில் காலிமனைகளில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டுவதால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனை தடுக்கும் வகையில் காலிமனை உரிமையாளர்களை பொறுப்பாக்கி அவற்றை சுத்தம் செய்து பராமரிக்கும் பணிக்காக கொள்கை அளவிலான திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் குப்பை இல்லா நகரத்தை 3 சிறந்த வார்டுகளை தேர்ந்தெடுத்து மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டு வெகுமதி வழங்கப்படும்.
சென்னை மாநகர மக்களின் குறைகாண கண்டறிந்து அவற்றின் மீது தீர்வுகாண 'மக்களை தேடி மேயர்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 1913 அமைப்பு மையம் மூலமாக பொதுமக்களிடம் புகார்கள் பெறப்பட்டு கூட்டமைப்புகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
'நம்ம சென்னை செயலி' மூலமாக பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தபால் மூலம் ஆணையர் அலுவலகம், வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களி லும் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தபால் மூலம் ஆணையர் அலுவலகம் வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களிலும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பொதுமக்கள் மேயரிடம் வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு மேயர் மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் 'மக்களை தேடி மேயர் திட்டம்' வருகிற நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.
வாகன நிறுத்த நடைமுறை அமைப்பில் உள்ள சிக்கலை தீர்க்க ஒரு பிரத்தியேகமான வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம் என்ற பிரிவு ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உறுப்பினர்களின் வளர்ச்சி மேம்பாட்டு நிதியானது ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.