மணலி பகுதியில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ்
- நாகை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மணலி புதுநகர், விச்சூர் பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை:
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில், திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறை முகத்தில் எல்.என்.ஜி. எனப்படும் திரவ நிலை எரிவாயு முனையத்தை அமைத்து உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் எரிவாயு இந்த முனையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் எரிவாயு எடுத்து செல்வதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வழியாக குழாய் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மணலியில் விச்சூர், மணலி புதுநகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்வதற்காக குழாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம், நாகை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர், விச்சூர் பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீட்டர் மூலமாக எரிவாயு பயன்பாடு கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வசூலிக்கப்படும் என்றனர்.