தமிழ்நாடு

வேங்கை வயலை தொடர்ந்து நாங்குநேரி சம்பவத்திலும் தமிழகத்தில் பல கட்சிகள் மவுன விரதத்தில் உள்ளன- அண்ணாமலை

Published On 2023-08-15 06:20 GMT   |   Update On 2023-08-15 07:38 GMT
  • எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள்.
  • புள்ளி விவரங்களை தி.மு.க. வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை விளக்க வேண்டும்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டப வளாகத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் மிகப்பெரிய உயரத்தை எட்டிக்கொண்டு இருக்கின்றோம். 2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற பாரத பிரதமர் கனவு நிறைவேற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள். புள்ளி விவரங்களை தி.மு.க. வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை விளக்க வேண்டும். நீட் தேர்வுக்கு தி.மு.க. முழுக்க முழுக்க எதிரியாக உள்ளது.

ஆளும் கட்சியாக தி.மு.க. வந்த பிறகும், முதலமைச்சர் இதனை வைத்து அரசியல் செய்கிறார். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க., எதிர்க்கட்சி போல் நடப்பது சரியா?. குழந்தைகளின் அறிவுத்திறனை பொறுத்து என்ன படித்தால் மேன்மை பெற முடியும் என்பதை பார்க்க வேண்டும். பெற்றோரின் கனவை குழந்தைகள் மீது திணிப்பதும் தவறு.

வேங்கை வயல் மற்றும் நாங்குநேரி விவகாரத்தில் பல கட்சியினர் மவுன விரதத்தில் உள்ளனர். இன்னும் முதலமைச்சர் வன்மத்தை தூண்டுகிறார்.

அ.தி.மு.க. பொன்விழா மாநாடு மிக சிறப்பாக நடக்க எங்கள் வாழ்த்துக்கள். சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். சமூகத்தில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும்.

தி.மு.க. அமைச்சர்களே பல இடங்களில் சாதி வன்மத்தை கடைப்பிடிக்கிறார்கள். ரெட் ஜெயின் மற்றும் உதயநிதி ஆகியோர் சாதிய படம் எடுக்கிறார்கள். இதை பிஞ்சு நெஞ்சங்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். படம் சமூக அக்கரையில் எடுப்பது வேறு, சமூக தாக்கத்தை படம் எடுப்பது என்பது வேறு. வன்முறையை தூண்டுவதை தடுக்க வேண்டும். இதனை முதலமைச்சர் பாராட்டுகிறார்.

நாங்குநேரியில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் அவர் வீட்டில் இருந்து படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News