தமிழ்நாடு

மருத்துவ மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலையா?: 3 பேராசிரியர்கள் தொல்லை கொடுத்ததாக எழுதிய கடிதம் சிக்கியது

Published On 2023-10-07 08:52 GMT   |   Update On 2023-10-07 08:52 GMT
  • கல்லூரி விடுதியில் சோதனை செய்த போலீசார், சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
  • ஒரு பேராசிரியர், மனதளவிலும், உடல் அளவிலும் தொல்லை கொடுத்ததாக கடிதத்தில் சுஜிர்தா தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருவட்டார்:

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி.நகரைச் சேர்ந்த வியாபாரி சிவகுமார் மகள் டாக்டர் சுஜிர்தா (வயது27), முதுநிலை எம்.டி பயிற்சி டாக்டராக ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் மாணவியர்களின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

நேற்று அவர் கல்லூரிக்கு காலையில் வராததால், சக மாணவிகள் மதியம் விடுதி அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுஜிர்தா மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் வந்து பார்த்து பரிசோதனை செய்தனர். அப்போது சுஜிர்தா இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருப்பதாக கூறப்பட்டது.

இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தினர் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்து சுஜிர்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி விடுதியில் முதுகலை படிக்கும் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் (குலசேகரம்), ஜானகி (திருவட்டார்) மற்றும் போலீசார் சுஜிர்தா தற்கொலை செய்த விடுதி அறைக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மகள் தற்கொலை குறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சிவகுமார் மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர்.

அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கபட்டிருந்த சுஜிர்தா உடலைப் பார்த்து கதறி அழுதனர்.தொடர்ந்து சிவகுமார், குலசேகரம் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"எனது மூத்த மகள் சுஜிர்தா, சென்னையில் தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து டாக்டரானார். பின்னர் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் முதுநிலை எம்.டி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் கல்லூரி நிர்வகத்தில் இருந்து போன் வந்தது.

உங்கள் மகள் சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது என போனில் பேசியவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

உடனே குடும்பத்தினருடன் கிளம்பி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி வந்தோம். அங்கு வந்து பார்த்த போது எனது மகளின் உடலை பிணவறையில் வைத்து இருந்தனர். அவளது மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவள் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதில் உள்ள மர்மங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரனை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த சூழலில் கல்லூரி விடுதியில் சோதனை செய்த போலீசார், சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ஒரு பெண் பேராசிரியை உள்பட 3 பேராசிரியர்கள் தனக்கு டார்ச்சர் கொடுத்ததாக சுஜிர்தா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு பேராசிரியர், மனதளவிலும், உடல் அளவிலும் தொல்லை கொடுத்ததாக கடிதத்தில் சுஜிர்தா தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டிருக்கலாமா? அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜானகி மற்றும் போலீசார், ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி சென்று இன்று காலை விசாரணை நடத்தினர். சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்துடன் சென்ற அவர்கள், அதில் குறிப்பிட்டிருந்த 3 பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News