தமிழ்நாடு (Tamil Nadu)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,832 கன அடியாக அதிகரிப்பு

Published On 2024-07-07 04:43 GMT   |   Update On 2024-07-07 04:43 GMT
  • ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
  • அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

மேட்டூர்:

மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. அதன்படி இங்கிருந்து வேலூர், சென்னை வரை குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் சரிந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்து டெல்டா பாசனத்திற்கு குறிப்பட்ட காலத்தில் தண்ணீர் திறக்க முடியாமல் போனது.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 11,027 ஆயிரத்து கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 102 அடியை எட்டியை உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 562 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 81.12 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 5,039 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து 3,250 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு அணைக்கு வருகிறது. நேற்று வினாடிக்கு 1,465 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி அளவில் 2,832 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 39.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 40.05 அடியாக உயர்ந்தது. இனிவரும் காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் மளமளவென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News