எந்திர வாக்கு பதிவு முறையே சிறந்ததாக உள்ளது- அமைச்சர் துரைமுருகன்
- நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.
வேலூர்:
தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இன்று காட்பாடி காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர்.
அப்போது துரைமுருகன் கூறியதாவது:-
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக எனக்கு தகவல் வந்து கொண்டிருக்கிறது.
இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.
வாக்காளர்கள் ஒழுங்கா வந்து வாக்கு மட்டும் போட்டால் போதும். இன்னமும் ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்தி தான். இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூளை முடுக்குகள் உள்ளன.
தேர்தல் ஆணையம் எப்போதுமே சரியாக இருக்காது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். எந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை.
நதிநீர் இணைப்பிற்கு தமிழகம் எப்போதும் தயாராக உள்ளது. தற்போது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் கர்நாடக மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் அப்படி பேசுகிறார்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.
மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தமிழகத்தின் உரிமை. நான் 25 ஆண்டுகளாக காவிரி பிரச்சனையை கவனிக்கிறேன். இது எனக்கு சாதாரணமான செய்தி.
புதியதாக பதவிக்கு வந்ததால் கர்நாடகா துணை முதல்- மந்திரி சிவக்குமாருக்கு இது புதுசாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.